டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அவரது  வெற்றியை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ராகுல்காந்தி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரான  சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சரிதாநாயர் போட்டியிட்டார்.  கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தன்னை ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

ஆனால்,  வயநாடு தொகுதியில் சரிதாநாயரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அமேதி தொகுதியில் அவர் தேர்தலில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

 வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சரிதாநாயர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அமேதி தொகுதியில் போட்டியிட என்னை அனுமதித்த நிலையில், வயநாடு தொகுதியில் நான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. எனவே வயநாடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். சரிதாநாயரின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சரிதாநாயரின் மனுவுக்கு நேற்று ராகுல்காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் 2 குற்ற வழக்குகளில் தண்டனையும், குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்ட சரிதாநாயர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை நிராகரிக்க வேண்டும், ஏற்க கூடாது என்று கூறியிருந்தார்.  இதையடுத்து சரிதா நாயர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சரிதா நாயகர் தரப்பில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த மனுமீது ஜூன் 10 அன்று  விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்,  சரிதா நாயகர் வழக்கறிஞர் மனுவை ஏற்று ஒத்திவைப்பதற்காக  தெரிவித்ததுடன், கேரள உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ள அறிவுறுத்தியது, வழக்கை  நவம்பர் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. , தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்  வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில்,  சரிதா எஸ் நாயர் சார்பில் யாரும் ஆஜராகாததால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் அளித்த மேல்முறையீட்டை பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

நாயரின் வேட்புமனு ஆவணங்கள் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் செக்சன் 8 (3) இன் கீழ் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயநாடு தொகுதியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  ராகுல்காந்தி, 4, 31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிபி சுனீரை விட  2,74,597 வாக்குகளைப் பெற்றார், காந்திக்கு 7,06,367 வாக்குகள் கிடைத்தன.