டில்லி

செப்டம்பர் 15 வரை அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதியுடன் அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம்  முடிவடைகிறது. மத்திய அரசு எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை அக்டோபர் 15ந்தேதி வரை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது நீதிபதி, எதற்காக ஒரு நபருக்காக மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்பு தொடர்பாக வருகிறீர்கள், அமலாக்கத்துறையில் வேறு அதிகாரிகள் இல்லையா, இது மற்ற அதிகாரிகள் யாரும் திறமையானவர்கள் இல்லை என்ற உருவகத்தைக் கொடுக்கும் வகையில் உள்ளது போன்ற கேள்விகளை முன்வைத்தார்.

மத்திய அரசு சார்பில்

“வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்கக்கூடிய, அதேவேளையில் பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதைக் கண்காணிக்கக்கூடிய அமைப்பானது இந்தியாவிற்கு வருகிறது.

இந்த கூட்டம் 10 ஆ ண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அப்போது அமலாக்கத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கருத்து பரிமாற்றங்கள் முக்கியமானது. அதன் காரணமாகவே இவருக்கான பதவி நீட்டிப்பைக் கேட்கிறோம் என தெரிவிக்கப்பட்டது. தேசத்தின் நலன் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்”

என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அந்த வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, செப்டம்பர் 15-ந்தேதி வரை எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.  மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும், இது தொடர்பாக யாரேனும் வழக்குகள் தொடுத்தாலும், அதனை விசாரணைக்கு ஏற்கமாட்டோம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.