டில்லி:
விளம்பரத்திற்காக பொது நல வழக்கு தொடர்ந்த பாபா சுவாமி ஓம்ஜிக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து பாபா சுவாமி ஓம்ஜி மற்றும் டில்லியை சேர்ந்த அலுமினிய தொழிற்சாலை பொறியாளர் முகேஷ் ஜெயின் ஆகியோர் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கான பெயர்களை தற்போதைய தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று இருவரும் நேரில் ஆஜராகி வாதிட்டனர். இரண்டாம் நிலையில் உள்ள மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா பெயரை தலைமை நீதிபதி பீரிந்துரை செய்தாரா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இது வழக்கு தொடர்பாக ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. பின்னர் பொது நல வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி கேஹர், இந்த மனு விளம்பர நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஓம்ஜி மற்றும் ஜெயின் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
ஒரு மாத காலத்தில் இந்த அபராத தொகை செலுத்தப்பட வேண்டும். இந்த தொகை முழுவதும் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டத்தில் எந்த விதி மீறலும் கிடையாது. அவரது பணிகாலத்தில் எவ்விதமான சர்ச்சைகளிலும் அவர் சிக்காதவர் என்பதை நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
பாபா சுவாமி ஓம்ஜி விமர்சனத்திற்கு உள்ளாவது இது முதன் முறை கிடையாது. ஏற்கனவே பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட போது ஆபாசமான பேசி எதிர்ப்புகளை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.