டில்லி

சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது

மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.   இந்த வழக்கை கடந்த 2013 ஆம் வருடம் சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது.   சுமார் 6 வருடங்களை நெருங்கும் நிலையிலும் இன்னும் சிபிஐ விசாரணை முடிவடையாமல் உள்ளது.

இதனால் சாரதா சிட்பண்டில் முதலீடு செய்து பணம் இழந்தவர்கள் கடும் துயருற்றனர்.   அவர்களில் சிலர்  சிபிஐ விசாரணை மிகவும் மெதுவாக நடைபெறுவதால் தங்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாவதாக வருத்தம் தெரிவித்தனர்.

அதை ஒட்டி இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சிவ் வர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது.

அந்த அமர்வு இன்று தனது தீர்ப்பில், “இந்த வழக்கு குறித்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் எந்த ஒரு கண்காணிப்பு குழுவையும் அமைக்காது” என கூறி உள்ளது.   இந்த தீர்ப்பினால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.