டில்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு செல்ல அனுமதி கோரியிருந்த நிலையில், அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கார்த்தியிடம் விசாரணை நடைபெறும் தேதி குறித்து வரும் 30ந்தேதி தெரிவிக்கப்படும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம், பிப்ரவரி மாதம் 21ந்தேதி முதல் 28ந்தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்ப தாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, கார்த்தி வெளிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, கார்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராவார் என்று உறுதி அளித்த உச்சநீதி மன்றம், கார்த்தியிடம் விசாரணை நடைபெறும் தேதிகள் குறித்து அமலராக்கத்துறை வரும் 30ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.