டில்லி
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அளித்தது. அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆனது. இந்த புதிய சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இந்த ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள்.
அதே நேரத்தில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலத்தின் சொந்தக்காரர்கள், 1000 அடிக்கு அதிகமான இடத்தில் குடியிருப்போர் ஆகியோருக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த 10% புதிய இட ஒதுக்கீடு ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றவர்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கியது.
முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவின்படி இடஒதுக்கிடு 50% மேல் இருக்கக் கூடாது என உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை குறைக்காமல் இந்த ஒதுக்கீட்டையும் சட்டமாக்கி உள்ளது. எனவே தற்போது இட ஒதுக்கீடு 50% தாண்டும் நிலை உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அந்த பொது நல வழக்கு மனுவில் இந்த சட்டத்துக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க கோரிக்கை அளிக்கபட்டது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கு மார்ச் 28 ஆம் தேதி அதாவது இன்று ஒத்தி வைக்கப் பட்டது.
இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு இந்த வழக்கு விசரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்து வருவதால் இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று ஒத்தி வைத்தார்.