சென்னை: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 30 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ).
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இதர வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும், வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். மேலும், சொத்து அடமானத்தின் பேரில் பெறப்பட்ட தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் 30 அடிப்படை புள்ளிகள் உயரும்.
கொரோனா வைரஸ் தொற்றால், கடன் வாங்கியோரின் கடன் சுமை அதிகரித்துள்ள இந்த நேரத்தில், இதுபோன்றதொரு எதிரான முடிவை எஸ்பிஐ எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.05% என்று ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது, 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த வட்டி விகித உயர்வு, இம்மாதம்(மே) 1ம் தேதியிலிருந்தே அமலுக்கு வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
புதிதாக வீட்டுக்கடன், சொத்து அடமானக் கடன் வாங்குவோருக்காக, 2019ம் ஆண்டு அக்டோபரில் பல்வேறு சலுகைகளை, எஸ்பிஐ வழங்கியதும் நினைவிருக்கலாம்.