அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், பத்திரத்தை வாங்கிய தேதி மற்றும் மதிப்பு, மற்றும் பத்திரங்களை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் பெயர்கள் ஆகிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேற்று மாலை வழங்கியுள்ளோம்.

ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை 22,217 பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 22,030 பத்திரங்கள் உரிய அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

2019, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 11 வரை மொத்தமாக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 3346 ஆகவும், அவற்றில் வரவு வைக்கப்பட்ட மொத்த பத்திரங்களின் எண்ணிக்கை 1609 ஆகவும் இருந்தது என்று எஸ்பிஐ தனது பிரமாணப் பத்திரத்தில் கூறுகிறது.

ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், மொத்தம் 20,421 பத்திரங்கள் வரவு வைக்கப்பட்டதாவும் எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மூலம் 187 தேர்தல் பத்திரங்கள் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அதேவேளையில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள தனிப்பட்ட குறியீடு மற்றும் அதை நன்கொடையாகப் பெற்ற கட்சிக்கு ஒவ்வொரு நன்கொடையையும் பொருத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட குறியீடு தரவுகள் உள்ளதா என்பது குறித்து இந்த மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விசாரித்ததில் SBI வங்கியில் இருந்து இரண்டு PDF கோப்புகளைப் பெற்றுள்ளதாகவும் இதனை ஆய்வு ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைக்கும் என்றும் SBI ஆல் பகிரப்பட்ட அதே வடிவத்தில் தரவை அதன் இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக தற்போது ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில் வியாழக்கிழமை அவர் டெல்லி திரும்பியதும் இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.