சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கர் சுமார் 64நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார்.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஊடகங்களில், யூடியூப் சேனல்களில் அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வைந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி அவர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
முன்னதாக இவர் திமுக அரசுமீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். குறிப்பாக முதலவரின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான நிறுவனமான ஜிஸ்யொயர் நிறுவனத்தின் அடாவடி தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். திராவிட ஆட்சி என்னும் பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். இதனால் திமுக அரசும், அவர்மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு குறித்து சவுக்கு சங்கர் பேசிய மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில், நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, சவுக்கு சங்கர் மீது, தானாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையின்போது சவுக்கு சங்கர் மன்னிப்பு கோர மறுத்ததால், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து 16ந்தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு கடந்த 11-ம் தேதி விசாரித்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர சிறையில் இருந்து வெளியேற முடியாதவாறு தமிழக அரசு மேலும் 4 வழக்குகளில் அவரை கைது செய்தது. அதாவது, கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கடந்த 11-ஆம் கைது செய்தது. இதன்மூலம் சவுக்கு சிறையில் இருந்து வெளியேற முடியாத நிலையை உருவாக்கியது.
இந்த 4 வழக்குகளில் இருந்தும் ஜாமின் கோரி சவுக்கு தரப்பில், எழும்பூர் குற்றவியல் நிதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் எதிர்ப்பை மீறி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதனப்டி, வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்ப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 64 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்துள்ள 5 நிபந்தனைகள்:
- சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
- உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, சமூக வலைதளங்களில் எந்தக் கருத்துக்களையும் பதிவிடக் கூடாது.
- நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்.
- சவுக்கு சங்கர் நீதித்துறை குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவே கூடாது.
- 20 ஆயிரம் ரூபாய் கொண்ட பத்திரத்தில், 2 நபர்கள் பிணையம் வழங்க வேண்டும்.
முன்னதாக கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வாசலில் வேனின்ல இருந்தவாறு ஊடகத்தினரை பார்த்துபேசிய சவுக்கு சங்கர், “திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக்கொண்டி ருக்கிறது. அதைப் பற்றி பேசியதற்காகத்தான் என் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. வெளியே வந்து இந்த கொள்ளைக் கூட்டத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.