‘நதிகளை மீட்போம்’ கொட்டும்மழையிலும் இளைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

Must read

சென்னை:

திகளை மீட்போம் என்று பதாதைகளை காட்டி சென்னையில் இளைஞர்கள் கொட்டும் மழையிலும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதற்கிடையிலும்  சென்னையில் ஆங்காங்கே சாலையோரம் நதிகளை மீட்போம் என்ற பிரச்சார பதாதைகளுடன் இளைஞர்கள், இளைஞிகள் பங்குகொண்ட விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

கொட்டும் மழையிலும்  நதிகளை காப்போம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டது அவ்வழியில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது.

நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரபல சாமியாரான  ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்  நாளை மறுதினம் (3ந்தேதி)  கோவையில் பேரணி ஒன்றை தொடங்க இருக்கிறார்.

இந்த பேரணி தமிழகத்தில் தொடங்கி, கேரளா, கர்நாடகா, மராட்டியம் என 16 மாநிலங்களின் வழியாக சென்று அக்டோபர் மாதம் டில்லியை சென்றடைகிறது.

இதை வலியுறுத்தும் வகையிலும்,  இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நதிகளை மீட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில்  பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் சாலை ஓரங்களில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்தவர்கள் நதிகளை மீட்போம் என்ற வாசகங்களுடனான பதாகைகளுடன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அணிவகுத்து நிற்கின்றனர்.

40 சதவீத நதிகள் அழியும் நிலையில் இருப்பதால் அவற்றை காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பதாகைகளில் 80009 80009 என்ற தொலைபேசி எண் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பொதுமக்கள் நதிகளை மீட்கும் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

More articles

Latest article