விநாயக் தாமோதர் சாவர்க்கர் 2014 ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அதிகம் பேசப்படும் பெயராக மாறிவிட்டது.
சாவர்க்கரை வீரபுருஷனாக மாற்றும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கர்நாடகா மாநில எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிதாக செய்யப்பட்டிருக்கும் மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கர்நாடக பாஜக அரசு அமைத்த பாடத்திட்ட குழு ‘காலத்தை வென்றவர்கள்’ என்ற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ளது.
அந்தமான் செல்லுலார் சிறையில் ஈ எறும்பு கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் தினம்தோறும் தனது அறையில் இருந்து ‘புல்-புல்’ பறவை மீது அமர்ந்து இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு கட்டுக் கதையை மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியபோது, ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரரை பெருமைபடுத்தும் விதமாக இவ்வாறு எழுதியிருப்பதில் எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.