ரியாத்: செளதி அரேபியாவின் பிரபல மனித உரிமை மற்றும் பெண்ணிய போராளி லெளஜெய்ன் அல்-ஹத்லெளல், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
லெளஜெய்ன் அல்-ஹத்லெளல் சிறையிலடைக்கப்பட்டபோது, செளதி அரேபியாவின் மனித உரிமை அடக்குமுறைகள் குறித்து கடும் சர்வதேச விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செளதி அரேபியாவில் பெண்களுக்கான வாகனம் ஓட்டும் உரிமைக்காக இவர் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக, இவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இவர், சில வெளிநாடுகளின் நோக்கங்களுக்காக, செளதியில் போராடுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.
லெளஜெய்ன் அல்-ஹத்லெளல் சிறை மீண்டுள்ளதை அவரின் சகோதரி லினா அல் ஹத்லெளல் உறுதிபடுத்தியுள்ளார். சிறையிலிருந்து இவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏனெனில், இவரின் தண்டனை ஏற்கனவே பகுதியளவு குறைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, மனித உரிமைகள் தொடர்பாக அவரின் நிர்வாகம் கவனம் செலுத்தும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.