சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெத்தா நகரில் அல்சாட் கட்டுமான நிறுவனம் என்ற(Alsaat contractors ) தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். இவர்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களே அதிகம் என்றாலும் கணிசமான இந்தியர்களும் உண்டு.
இந்த நிலையில் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர், அல்சாட் கட்டுமான அலுவலகத்தின் முன் கூடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு கடந்த இருமாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
சுமார் ஒருமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. பிறகு நிர்வாக தரப்பில், ஊழியர்களுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டது. ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் தரப்படும் என்று உறுதி கூறப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை திரும்பப் பெற்று பணிக்குத் திரும்பினர்.