ரியாத்
தனது 13 வயதான போது கைதுசெய்யப்பட்ட முர்தாஜா குவெரிஸ் என்னும் 18 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கபட உள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த முர்தாஜா குவெறிஸ் என்னும் சிறுவன் ஷியா என்னும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவன் ஆவான். அவன் அரசுக்கு எதிராக சதிச் செயல்கலில் ஈடுபடதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2014 ஆம் வருடம் அரசு கைது செய்தது. தனது குடும்பத்தினருடன் பெஹ்ரைன் சென்றுக் கொண்டிருந்த குவெறிஸ் எல்லையில் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட குவெறிஸ் அல் தமான் நகரில் உள்ள சிறுவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். அதன் பிறகு அவனுடைய 16 ஆம் வயதில் பெரியவர்கள் சிறைக்கு மாற்றப்பட்ட முர்தாஜா குவெறிஸ் மீதான குற்றங்கள் குறித்து விசாரணை தொடங்கியது. தீவிரவாத குற்ற நீதிமன்றத்தில் தற்போது 18 வயதாகும் இவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் மரணத்துக்கு பிறகு இவனது சடலம் தொங்க விடப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் அரசிடம் முறை இட்டனர். அரசு சார்பில், “அரசுக்கு எதிராக நடக்கும் அனைத்து குற்றவாளிகளுக்கும் சவுதி அரேபியா மரண தண்டனை வழங்கி உள்ளது. அவ்வாறு ஷியா வகுப்பை சேர்ந்த பல சிறுவர்களுக்கு மரண தண்டனை அளிக்கபட்டுள்ளது” என பதில் அளிக்கப்பட்டுள்ளது.