ரியாத்
சவுதி அரேபியாவின் இளவரசரான அல்வாலீட் பின் தலாலை ஊழல் புகாரில் இருந்து விடுவிக்க $ 6 பில்லியன் (சுமார் 39000 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் ஊழல் புகார் காரணமாக அந்நாட்டின் இளவரசர் அல்வாலிட் பின் தலால் உட்பட 11 இளவரசர்களும் பல அமைச்சர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமைத்துள்ள புலனாய்வுத் துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தத் துறை சமீபத்தில் இளவரசர் அல்வாலிட் பின் தலாலை விடுவிக்க அவரது மொத்த சொத்து மதிப்புக்களில் மூன்றில் ஒரு பங்கை அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அதன்படி சுமார் $ 18.7 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட அல்வாலிட் சுமார் $6 பில்லியன் அபராதம் செலுத்த வேண்டி வரும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.39000 கோடி ஆகும்.
அதற்கு பதிலாக அவரது $ 8.7 பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குகளை அவர் அளிக்க வேண்டும் என சவுதி அரசு எதிர்பார்ப்பதாக புகழ்பெற்ற செய்தித் தாளான வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. ஆனால். அதற்கு அல்வாலீட் ஒப்புக் கொள்ள மாட்டார் எனவும் அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது.