டில்லி

முத்தலாக் தடை சட்டம் இந்தியாவில் கடும் விவாதத்துக்கு உள்ளாகும் வேளையில் மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள விவாகரத்து சட்டம் பற்றி இப்போது பார்ப்போம்.

இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை சட்டம் மக்களிடையே கடும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.   பலரும் இதை ஆளும் பாஜக இஸ்லாமியர்கள் மேல் திணித்துள்ள சட்டம் எனக் கருத்து கூறி வருகின்றனர்.    விவாதத்தின் போது சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “பாகிஸ்தான், எகிப்து, வங்க தேசம் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் இது போல சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.  அந்நாடுகளிலும் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் சொல்வது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்லாமிய நாடுகளில் உள்ள விவாகரத்து சட்டங்களைப் பற்றி தற்போது பார்ப்போம்

பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம்

பிரிவினைக்கு முன் பாகிஸ்தான் இயற்றிய விவாகரத்து சட்டமே இன்றும் இரு நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது.  அதன்படி விவாகரத்து பெற விரும்பும் ஆண் சட்ட மையத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.   அத்துடன் அந்த விண்ணப்பத்தின் பிரதியை மனைவிக்கு அளிக்க வேண்டும்.   ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறினால் ஒரு வருட சிறைத் தண்டனையோ அல்லது ரூ. 5000 அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

துனிசியா

இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் மட்டுமே விவாகரத்து அளிக்கப்படும்.  அது தவிர நீதிமன்றம் முழுமையாக விசாரித்து இனி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்னும் நிலை இருந்தால் மட்டுமே விவாகரத்து அளிக்கப்படும்.

எகிப்து

எகிப்தில் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறும் முறையே கிடையாது.  குறைந்த பட்சம் மூன்று மாத இடைவெளியில் மட்டுமே தலாக் கூற முடியும்.   முதல் முதலில் சொல்லப் படும் தலாக் ஒரு அறிவிப்பாக மட்டுமே கருதப் படும்.

இந்தோநேசியா

நீதி மன்றம் இருவரையும் இணைக்க முயலும்  அந்த முயற்சி தோல்வியுற்றால் நீதிமன்றத்துக்கு மட்டுமே விவாகரத்து அளிக்கும் உரிமை உண்டு.  இதை மத சம்பந்தப்பட்ட யாரும் அளிக்க முடியாது.

மொரோக்கோ

தலாக் கூற விரும்பும் கணவன் வழக்கரிஞர் மூலம் நீதிமன்ற அனுமதியை கேட்க வேண்டும்.   நீதிமன்றம் அனுமதிக்காமல் எத்தனை முறை தலாக் கூறினாலும் அது ஒரு முறை மட்டும் கூறியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு விவாகரத்து வழங்கப்பட மாட்டாது.

துருக்கி

சட்ட பூர்வமில்லாத விவாகரத்தை துருக்கி அனுமதிப்பதில்லை.  திருமணங்கள் முறையாக அரசு அலுவலகத்தில் பதியப் பட வேண்டும்.  அப்படி பதியப் பட்ட திருமணம் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்.  அத்துடன் விவாகரத்தை நீதிமன்றமே முடிவு செய்யும்.

ஆப்கானிஸ்தான்

ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறினால் அது ஒரு முறை கூறியதாகவே கருதப் படும்.  அது மட்டுமின்றி அதன் பிறகு விவாகரத்து தரப்பட மாட்டாது.

ஈரான்

அரசு மற்றும் நீதிமன்றம் மூலமே விவாகரத்து பெற முடியும்.  பொதுமக்களின் பிரதிநிதிகள் முன்பு விசாரணை நடத்தி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என நிரூபிக்க வேண்டும்.  அதன் பிறகே நீதிமன்றம் அல்லது அரசு விவாகரத்து வழங்கும்.

மொத்தத்தில் பல இஸ்லாமிய நாடுகளில் ஒரேமுறை முத்தலாக் கூறுவது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.   அவ்வாறு கூறினால் ஒரு முறை கூறியதாக மட்டுமே கருதப் படுகிறது.   ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலாக் மற்றும் மறு தலாக் சொல்ல கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதன்படி மூன்றாம் முறை தலாக் சொன்ன பின்பு விவாகரத்து வழங்கப்படுகிறது.