சாத்தூர்: கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண காசோலை, பணமில்லாமல் திரும்பியது. இனால் பலியானவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பட்டாசு ஆலை வெடித்து சிதறியது. இதில், மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாணையைத் தொடர்ந்து, உயரிழந்த 25பேரின் குடும்பங்களுக்கு, ஆலை நிர்வாகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தனத்தனியாக காசோலை வழங்கப்பட்டது.
ஆனால், அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியவர்கள், அதில் பணமில்லை என்று திரும்பிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்திருப்பதாகவும், மற்றவர்களுக்கு பணமில்லை என்று காசோலை திரும்பி விட்டதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள், ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி, நிவாரணம் பெற்று தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கூறிய மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.