“சாதிப்பாகுபாட்டால் மாணவர் தற்கொலை!”:  சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதி வேண்டி நடந்த கண்டன கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னை, துறைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர் சிவராஜ் ஆகியோர் சாதி குறித்து  இழிவாகப் பேசியதாகவும் அதனால் தற் கொலை செய்துகொள்வதாகவும் எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டி இறந்தார்.

இவரது மரணத்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில்  பிரகாஷ் தற்கொலைக்கு நீதி வேண்டி நடந்த கண்டன கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்றது.

மாணவர் பிரகாஷ் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கடசித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத் தலைவர்  திருமுருகன்காந்தி, நடிகர் சத்யராஜ்,  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொளத்தூர் மணி பேசுகையில், “சமீப காலங்களில் கல்வி நிறுவனங்களில் சாதி மத பாகுபாடுகள் அதிகரித்து விட்டன. வட மாநிலங்களில் அதிகமாய் இருந்த இது போன்ற பாகுபாடுகள் தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கல்வி நிறுவனங்களை நோக்கி கனவுகளோடு வரும் இப்படிப்பட்ட மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது துயரமானது” என்று பேசினார்.

தொல் திருமாவளவன் பேசுகையில், “ பள்ளிகளில் பின்பற்றபடும் சாதிய பாகுபாடுகள் பல்கலைகழகங்கள் வரையில் தொடர்கிறது. ரோகித்வெமூலா, முத்துகிருஷ்ணன்,  அனிதா போன்ற சிறந்த மாணவர்களை இப்படித்தான் சாதி ,மத பாகுபாடுகள் பலிகொண்டன .

மேலும் 11ம் வகுப்புகளின் சேர்க்கையின் போதே இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. கணிதம், அறிவியல் போன்ற முக்கிய பாடப்பிரிவுகள் தலித் மாணவர்களுக்கு கிடைக்காமல் திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறது .  மாணவர் பிரகாஷ் தன் விளக்க வாக்குமூலத்தில் தெளிவாக குறிப்பிட்டப்படி தற்கொலைக்கு தூண்டியதற்கான பிரிவில் காவல்துறை வழக்கு பதியாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது . அப்படி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறுவதால் வரும் 28ம்தியதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

வேல் முருகன் பேசுகையில், “மாணவர் பிரகாஷ் இறந்து ஒரு மாதம் ஆகியும் அரசு தரப்பிலோ காவல்துறை தரப்பிலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்,  “கல்வி நிறுவன படுகொலைகளுக்கு எதிரான கூட்டமைப்பு” என்ற இந்த அமைப்பு இப்போது போராட்ட களத்திலே இறங்கியிருக்கிறது . அரசின் செவிகளுக்கு கேட்கும் வரை போராட்டம் தொடரும். என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “இனி வரும் காலங்களில் இது போன்ற மன நிலையில் சிக்கிக்கொள்ளும் மாணவர்கள் அல்லது பாதிக்கப்படும் மாணவர்கள் தயவு செய்து பெரியாரிஸ்ட் , அம்பேத்கரிஸ்ட் போன்ற புரட்சிகர இயக்கங்களை சார்ந்த நண்பர்களை தொடர்புகொள்ளுங்கள். உங்களை காக்க நாங்கள் இருக்கிறோம்” என்றார்

பா. ரஞ்சித் பேசுகையில், “சுமார் 167 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான் படித்த கவின்கல்லூரி இன்று சாதிய மதவாத கூடமாக மாறிவிட்டது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. சாதி மத ரீதியாக மாணவர்களை பிரிக்கும் ஆசிரியர்கள் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அதிகரித்து விட்டனர். இதனை தடுத்து நிறுத்துவது நம் கடமை” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவர் பிரகாஷின் பெற்றோர், “எங்களது மகனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர் களிடம் கேட்டுக்கொண்டனர்.