சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வடமாட்டங்களில் வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு காரணம் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதுதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அதுகுறித்து விளக்கம் அறிவித்து உள்ளார்.
சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தனூர் அணையை திறப்பதற்கு முன்னர் 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பிறகுதான் அணையிலிருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு திறமையாக கையாண்டதால்தான் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்காமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அணையை திறக்காமல் அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(பொதுவாக செய்தியாளர்களை சந்தித்து நக்கலாக விளக்கம் அளித்து பேசும் துரைமுருகன், இந்த விஷயத்தில் அறிக்கை மட்டும் வெளியிட்டு இருப்பது சந்தேகங்களை எழுப்பி உள்ளது)
முன்னதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. டிசம்பர் 1 காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் , அதாவது டிசம்பர் 2ந்தேதி அதிகாலை 2.45 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது.
இதனால் அதிகாரிகள், சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதையும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றினர். இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது.
முன்னதாக அணையில் இருந்து, விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என அறிவித்துவிட்டு, நள்ளிரவில் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட தால் கரையோரங்களில் வசித்த 4 மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக நீர்வளத்துறை தரப்பில் டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் என்பவர், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், அவர் அறிவிப்புக்கு மாறாக, அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
அதுபோல டிசம்பர் 2ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அதிகாரிகளின் மெத்தனத்தால், அணையில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்பட்டது, நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு‘ தெரியாத நிலையே ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்த எச்சரிக்கையை அதிகாரிகள் முறையாக கிராமங்களுக்கு சென்று தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், அதிகாரிகள் கூறியதற்கு மாறாக, எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், இதை எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. திருவண்ணாமலை – விழுப்புரம், திருக்கோவிலூர் – விழுப்புரம், விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும், தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்ட அவலம் ஏற்பட்டது.
முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்தே 4மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…