மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யது. அதையடுத்து, அவர்களின் காவல் ஜூலை 30ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதையடுத்து, தந்தை மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியதுடன், கைது செய்யப்பட்ட ஆய்வாளர் உள்பட காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி நிதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரிடம் 3 நாள் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்கள் 5 பேரும் மீண்டும் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து, 5 காவலர்களுக்கும் ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் காவலர் முத்துராஜூக்கு மட்டும் சிபிஐ வேண்டுகோளை ஏற்று, மேலும் ஒரு நாள் சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.