மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக, சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடத்திய அப்போதைய சாத்தான்குளம் , இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், தடவியல் சோதனை அதிகாரிகள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஆய்வு செய்தனர். இதில், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, சிபிஐ சிறையில் உள்ள காவல்துறையினர் மீது குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், ஆய்வாளர் பால்துரை உள்பட சிறையில் உள்ள காவல்துறையினர் ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பெண் காவலர்களின் வாக்குமூலங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய உத்தவிட்டது. மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.