தூத்துக்குடி:
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்  செய்யப்பட்டு வருகிறது. இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் நிர்வாக வசதிக்காக ஆவணங்கள் இடம் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில், சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இன்று விசாரணையை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
இதற்காக விஜய்குமார் சுக்லா தலைமையிலான   7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு  டெல்லியில் இருந்து தனி விமானம் மூல மதுரை வருகின்றனர். இன்று விசாரணையை தொடங்குகிறது.
இதன் காரணமாக, தற்போது சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக விசாரித்து  வரும் சிபிசிஐடி, வழக்கு தொடர்பான  கோப்புகளை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளனர். இன்று வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால்,  சிபிசிஐடி அதிகாரிகள், அங்கிருந்து வழக்கு தொடர்பான ஆவனங்களை மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றும் பணியில் ஈபட்டு வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து,  முதலில் இருந்து சிபிஐ  விசாரணையை தொடங்கும் என்று கூறப்படுகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், பொதுமக்கள், மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் உள்பட, காவலர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த  பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  இதுவரை 10 போலீசாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.