சென்னை

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட வெற்றியால் தனத் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமலி’. படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் சசிகுமார்,

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்று நினைக்காதீர்கள். புது இயக்குநர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.

இந்தப் படம் வெளியான முதல் நாள் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடிதான் வசூலித்தது. என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டரைக் கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் இரண்டரைக் கோடிக்கும் ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் ‘சுந்தர பாண்டியனும்’, ‘குட்டிப்புலியும்’தான் அதிக வசூல் செய்த படங்கள். ஆனால் இன்று இந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் அதனை முறியடித்திருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள்.

‘சுந்தர பாண்டியன்’ படத்தில் உங்களை எல்லோருக்கும் எப்படிப் பிடித்ததோ அதேபோல இந்தப் படத்தில் வரும் தர்மதாஸ் கதாபாத்திரமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்கள்.அதே மாதிரி நான் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ எங்கள் வெற்றி அல்ல. இது தமிழ் சினிமாவின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இன்னும் பல குடும்பப் படங்கள் வர வேண்டும்”

என்று கூறினார்.