சென்னை: பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை சென்னை வர உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா, நாளை சென்னை வருகிறார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் அவருக்கு எல்லையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் பெரும்பாலான இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு தெரிவித்து அதிகளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் செல்லலாம் என்று தெரிகிறது.
அவரது வருகை ஒரு பக்கம் இருக்க, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம், நினைவு இல்லத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வேதா இல்லம், பின்னி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.