திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த அதிர்வலைகள் ஏற்படுத்திய வேகத்தில், அடுத்தது நிகழந்த கூட்டணி பேச்சு நிகழ்வுகளாலும், அரசியல் நகர்வுகளாலும், மெல்ல மறைந்தன. பெரும்பாலான ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும், இது சசிகலா அவர்களின் தோல்வியாக பார்ப்பதில் வியப்பில்லை. ஆனால், உண்மையில் இது தோல்வியா ?
போர் களத்தில் வெற்றியென்பது ஆயுதத்தாலோ, ஆள்படையின் எண்ணிக்கையாலோ மட்டும் தீர்மானிப்பதில்லை. எதிரி எதிர்பாக்காத தருணத்தில், எதிர்ப்பார்க்காத ஆயுதத்தால், எதிர்பார்க்காத முடிவுகளால் தீர்மானிக்கப்படுபவை.
இந்த நியதி அரசியல் களத்திற்கும் பொருந்தும். சசிகலா அவர்களின் அரசியல் ஒதுங்கியிருப்பது என்ற அறிவிப்பு, யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் எடுத்த எதிர்பார்க்காத முடிவு. களங்களின் விதியின் படிப்பார்த்தால், நிச்சயம் இது ஒரு தேர்ந்த அரசியல் முடிவாக தெரிகிறது.
சசிகலா மற்றும் ஜெயலலிதா அவர்களின் கடந்தகால அரசியல் முடிவுகளை பார்த்தால் அவர்களின் வியூகங்கள் புரியும். அவர்களின் எதிர்பாரா தருணங்களின் எதிர்பாரா ஆயுத வியூகம் பிரமிக்க கூடியதானது.
தமிழகத்தில், 1998 -இல் பாரதிய ஜனதா கட்சியுடனான முதல் முதல் கூட்டணி அமைத்து தமிழகத்திற்கு பட்டிதொட்டியெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை அறிமுகப்படுத்தியதாகட்டும் (அதுவரை யாரும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததில்லை ) , 2011 -இல் தேமுதிக-வை முதல் முதலில் அங்கீகரித்து யாரும் எதிர்பார்க்காத தொகுதி பங்கிட்டு கொடுத்து கூட்டணிஅமைத்து வென்றதாகட்டும், 2016 -இல் தமிழக வரலாற்றில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாக நின்றதாகட்டும், 2016 -இல் மூன்றாவது கூட்டணியைவைத்து ஆடாமல் வென்றதாகட்டும், அவர்கள் எதிர்பார்க்காத தருணங்களில், எதிர்பார்க்காத நகர்வுகளை செய்து வெற்றியை வசியம் செய்தவர்கள். அவர்கள் காலத்திற்காய் காத்திருந்த காரியம் மாற்றியவர்கள்.
சசிகலா அவர்களின் ஒதுங்கியிருப்பதற்கான அறிவிப்பு எதிரி களைப்பதற்காகவா அல்லது காலம் கனிவதற்காகவா ? நிச்சயம் அவர்களின் இன்றைய நோக்கம் ஆட்சியை பிடிப்பதில்லை என்பதை எந்த அரசியல் நோக்கரும் அறிவார்கள். கட்சியை கைப்பற்றுவதுதான் நோக்கம் என்றால் அதற்கு எடப்பாடி ஆடி களைத்தபின், கட்சியில் கலகம் வந்தபின், தோல்வியில் துவண்டபின், எளிதாக கைகூடும்.
சசிகலா, ஆட்டத்தை முடிக்கவில்லை, போட்டியை தான் விரும்பிய தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார். இந்த கால சூழ்நிலையில் தன்னை தயார் படுத்திக்கொள்வர், தக்க தருணத்தில் வலிமையான தாக்குதலை தொடுப்பார், வெற்றி நிச்சயம் என்று அறியும் தருணத்தில். அதுவரை, அவருடைய படை தளபதி களத்தில் களமாடுவர், களத்தை தயார்படுத்துவர். எடப்பாடியின் தோல்வியை அவர் உறுதி செய்வார். சிறந்த வீரர்கள் களத்திற்கு ஆயுதத்துடன் வருவதில்லை, களத்தில் கிடைக்கும் சூழ்நிலையில் இருந்து ஆயுதம் பெறுவர்.
தோற்றவராய் தோற்றமளிக்கும் சசிகலா பதுங்குவது தக்க சமயத்தில் பாய்வதற்கு என்பதை எடப்படியாரும் நன்கு அறிவார். அவரை நிலைநிறுத்தி கொள்வதற்கு வெற்றி நிச்சயம் தேவை. ஆனால், அந்த வெற்றியை எட்டா கனியாக்கும் வேலையை பலர் கூடி செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆனால், இம்முறை ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியப்போவதில்லை, காதுகளுக்கு புலப்படப்போவதில்லை. சாணக்கியர் நிறைந்த இந்த சதுராட்டத்தில், வெற்றி சாமானியர்க்கு வாய்ப்பதில்லை. வாய்தவர்கள் சாமானியர்களில்லை. தேர்தலில் அதிமுக தோற்றால், களம் சூடுபிடிக்கும், வியூகம் விஸ்வரூபம் எடுக்கும். காலத்தின் போக்கு அதையே எதிர்பார்க்க சொல்கிறது.
கட்டுரையாளர்: ராஜ்குமார் மாதவன்.