சென்னை:

புதியபார்வை இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சகோதரர் திரு. ம.நடராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

திரு நடராஜன் அவர்கள் இளம் வயது முதல் தன் கல்லூரி படிப்பின் போதே திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு தன் பொதுவாழ்வை தொடங்கியவர். மக்கள் தொடர்பு மாவட்ட அதிகாரியாக, அரசு பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர். “தமிழரசி”, “புதிய பார்வை” போன்ற இதழ்கள் தொடங்கி சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்இ பல நூல்களின் ஆசிரியர். தமிழ் வளர்ச்சியிலும், தமிழர்களின் நலனிலும் அக்கரை கொண்டு தொடர்ந்து பாடுபட்டு வந்தவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்து அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வந்தவர். அனைத்திந்திய அண்ணா தி.மு.க. ஜெயலலிதா அவர்கள் தலைமையில் தனியாக உருவாகி செயல்பட தொடங்கியபோது அக்கட்சியின் வளர்ச்சிக்கும், செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் பக்கபலமாக இருந்து தூண் போல் துணை நின்றவர்.

செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அக்கட்சியில், பலர் கட்சியிலும், ஆட்சியிலும் பல பதவிகள் பெறுவதற்கு உறுதுணையாய் இருந்து பலரை அரசியலில் உருவாக்கியவர். எல்லோரிடத்திலும் இனிமையாக வும் நாகரிகமாகவும் பழகக்கூடிய சிறந்த பண்பாளர். இலங்கை தமிழர்கள் நல் வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்து பாடுபட்டவர்.

ஆண்டுதோறும் பொங்கல் விழா போன்ற பல விழாக்களை நடத்தி தமிழ் அறிஞர்களை கௌரவித்தும், ஊக்கு வித்தும் அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர். சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராக, இனிய சகோதரராக அவரோடு நெருக்கமாக பழகியுள்ளேன். செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசியல் தொடக்க காலத்தில் நானும் திரு.நடராஜன் அவர்களும் இணைந்து ஒன்றாக செயல்பட்ட நினைவுகள் என்றும் பசுமை யானவை, மறக்க முடியாதவை.

திரு.நடராஜன் அவர்களின் திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை மிகுந்த மனத்துயரோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.