சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவரை தனக்கு டிரைவராக அமர்த்திய சசிகலா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வேலை பார்த்த அனைத்து நபர்களையும், தன்னிடம் வேலைக்கு அமர்த்தி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி சென்னை வந்துள்ள சசிகலா, மறைந்த ஜெயலலிதாவிடம் வேலை செய்து வந்த பழைய வேலையாட்களை மீண்டும் தனது பயன்பாட்டுக்கு பணியமர்த்தி வருகிறார்.
ஜெயலிதாவுக்கு சுமார் 25 ஆண்டுகாலம் கார் ஓட்டிய டிரைவரை தனக்கு டிரைவராக நியமித்துக்கொண்ட சசிகலா, அந்த டிரைவருடன்தான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பயணமானார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா வீட்டில் சமையல் செய்துவந்த ராஜம்மாள் என்ற மூதாட்டியை, தனக்கு சமையல்காரராக நியமித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு காவல்காரராக இருந்து வந்த ராஜன் என்பவரையும், சசிகலா தற்போது தனது வீட்டுக்கு காவலாளியாக நியமித்து உள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவிடம் பணியாற்றியவர்களை, தனக்கு சாதகமாக சசிகலா பயன்படுத்தி வருவது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், இதில் ஏதோ மர்மம் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என்று கூறப்படும் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை முன்னிறுத்தி, பின்பக்கமாக , தமிழக அமைச்சர்களையும், அதிமுகவையும் ஆட்டிப்படைத்ததுடன், சென்னை முதல் குமரி வரை கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துபோட்டார். ஜெயலலிவிற்கு பணிப்பெண்ணாக சென்ற சசிகலா, அவரை மயக்கி,,பின்னர், தவிர்க்க முடியாத தோழியாகவும், உதவியாளராகவும் மாறிப்போனர். இதனால், சசிகலா மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார். இதனால், ஜெயலலிதாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியானார். ஆனால், துரதிருஷ்டவசமாக, சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடையின்போது, ஜெ. மரணம் அடைந்தார், ஊழல் குற்றவாளி என்ற அவப்பெயர் பெறுவதில் இருந்து தப்பித்தார்.
முன்னதாக, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை வழங்கப்பட வில்லை என்றும், ஜெயலலிதா சசிகலாவால் தாக்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சுமார் 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகளும், அது தொடர்பான தகவல்களும் முரண்பாடாக இருந்தன. ஜெயலலிதா சாவுக்கு சசிகலா மற்றும் அவரது மன்னார்குடி வகையறாக்கள்தான் காரணம் என்று, அதிமுகவினர் மட்டுமின்றி, பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.
ஆனால், கடைசிவரை ஜெயலலிதா மரணத்திற்கு உரிய காரணத்தை, முறையான விசாரணை நடத்தி வெளியிட முடியாத எடப்பாடி தலைமையிலான அரசு, விசாரணை கமிஷன் என்ற பெயரில் ஆணையத்தை அமைத்துவிட்டு ஒதுக்கி விட்டது. தற்போது அந்த ஆணையமும், உச்சநீதி மன்ற உத்தரவால், முடங்கிப்போய் உள்ளது.
தற்போது, ஜெயலலிதாவிடம் பணியாற்றிய பணியாட்கள் அடுத்தடுத்து, சசிகலாவிடம் வேலைக்கு சேர்க்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சசியிடம் வேலைக்கு சேரும் ஜெ.வின் பணியாளர்கள் கடந்த 4 வருங்களாக எங்கே இருந்தார்கள், யாருடைய பாதுகாப்பில் வைக்கப்பட்டார்கள், அவர்களுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம், இவர்களிடம், ஜெ.மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முறையாக விசாரணை நடத்தியதா என அடுக்கக்டுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இதுகுறித்து காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.