பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் அதிமுக எம்.எல்.ஏ வீட்டுக்கு திருட்டுத்தனமாக சிறை அதிகாரிகள் உதவியுடன் சென்று வந்ததாக, டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே, சசிகலாவுக்கு தேவையான பிரிட்ஜ் மற்றும் உணவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும், ஓசூர் அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி மூலம், சிறை ஆம்புலன்சு வழியாக சிறைக்குள் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் பெங்களூர் சிறைத்துறை டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்துள்ள அறிக்கையில் மேலும் பரபரப்பு தகவல்களை கூறி உள்ளார்.
சசிகலா பரப்பான அக்ரஹாரா சிறையிலிருந்து ஓசூர் எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளதாகவும், பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒன்று மற்றும் இரண்டாவது வாசல்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில், அவர் சிறையிலிருந்து வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருக்கின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘சசிகலா, தனிப்பட்ட முறையில் சிறையின் நடத்தைகளையும் விதிமுறைகளையும் மீறியுள்ளார். சிறை விதிகளின்படி சசிகலாவை முதல் வகுப்பு சிறைக் கைதியாகக் கருத முடியாது.
ஆனால், சசிகலா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக சிறையில் முதல்வகுப்புக் கைதி போல வாழ்ந்தார். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த சிறைக் கைதிக்கும் கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலும் அது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்தபோது அளித்த அறிக்கையில் ரூபா கூறி உள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் இவ்வளவு வசதியாக இருப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்கள் விவாதித்துவரும் நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சிறை அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
சிறை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்பும், அதிமுக எம்.பி., எம்எல்எக்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது தெரிய வந்தது என்றும், ஆனால் சந்திப்பு குறித்து எந்தவித தகவல்களையும் பதிவு செய்வதில்லை என்றும், சசிகலா ரூமில் இருந்த அனைத்து வசதிகளும், எல்இடி டிவி, ஏர் கண்டிஷனர், சசிகலாவுக்கு தேவையான உணவு பொருட்கள் அனைத்தும் ஓசூரில் இருந்து சிறை ஆம்புலன்சு மூலம் சசிகலாவின் அறைக்கு கடத்தப்பட்டதாகவும், இதற்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இதுபோன்ற சட்டத்தை மீறிய செயலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தற்போது ரூபா குற்றச்சாட்டு காரணமாக, ஓசூர் அதிமுக எம்எல்ஏவும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.