பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர்  பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

அங்கு அவர் பல்வேறு சலுகைகளை கேட்டிருந்தார். ஆனால் கர்நாடக சிறைத்துறை அதற்கு அனுமதி அளிக்க வில்லை. ஆனால், பார்வையாளர்கள் சந்திக்க தாராளமான அனுமதி அளித்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு தேவையான உணவு பொருட்கள் தேவையான அளவு அவரை போய் சேர்ந்தது. அதன் காரணமாக அவர் பெரும்பா லான வேளைகளில் சிறை உணவை தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில்,  சசிகலாவை சிறையில் பார்த்தவர்கள் விவரம் கேட்டுசமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் மனு செய்திருந்தார். அதில் சசிகலாவை பார்த்தவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது.

நடராஜன்
(சசிகலா கணவர்)

கடந்த பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து மார்ச் 18-ந்தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது தெரிய வந்துள்ளது.

இது ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. சிறைத்துறை விதிகள் மீறப்பட்டுள்ள தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

மேலும், பார்வையாளராக சசிகலாவின் கணவர் நடராஜன் அதிகமுறை சிறைக்கு சென்று தனது மனைவியுடன் அளவளாவி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும்  வழக்கறிஞர்கள்,   லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் வளர்மதி, கோகுல இந்திரா, சிஆர் சரஸ்வதி மற்றும்  உறவினர்கள் என்று சொல்லியும் பலர் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறும்போது,  சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு சாதகமாக சிறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். அவர்கள்ள்மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, பரப்பன அக்ரஹார சிறைஅதிகாரி,  சிறைத்துறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கைதி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியும் என்றும், இனிமேல் அடிக்கடி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சசிகலா அணியை சேர்ந்த  கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி மூலம் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேச சசிகலா தரப்பு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இது சர்ச்சையாகி உள்ளதால், சசிகலாவுக்கு எந்தவித சலுகைகளும் அளிக்க முடியாது என்றும் சிறை நிர்வாகம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.