சென்னை
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா இன்று காலை சென்னை வர கிளம்பி உள்ளார்.

வருமானத்துக்கு மீறி சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது விடுதலை ஆகி கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று காலை சென்னை திரும்புகிறார்.
இதையொட்டி அமமுக வினர் அவர் தமிழகம் வரும் வழியில் 57 இடங்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். தமிழக கர்நாடக எல்லையான ஜூஜூ வாடியில் மேளதாளங்களுடன் 5000 பேர் சசிகலாவை வரவேற்க உள்ளனர். அதன் பிறகு கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சசிகலா பயணம் செய்கிறார்.
சென்னையில் செம்பரம்பாக்கத்தில் இருந்து நசரத்பேட்டை, குமணன் சாவடி, போரூர், கிண்டி, கத்திப்பாரா எனத் தொடங்கி தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சென்னை நகரில் பல இடங்களில் சசிகலாவை வரவேற்கும் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

தற்போதைய தகவலின்படி சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் கிளம்பி உள்ளார். சசிகலா தி நகரில் உள்ள தனது உறவினர் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தில் தங்கி தொண்டர்களைச் சந்தித்து பேச உள்ளார். காவல்துறையினர் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

[youtube-feed feed=1]