பெங்களூரு:
வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து, “மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது” என்று சசிகலா பதில் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற வி.கே. சசிகலா உட்பட மூவர் பெங்களூரு பரப்பன அக்கரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சசிகலாவின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சசிகலா வசித்த – மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை தொடர்பாக சசிகலாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். தான் மவுன விரதம் இருந்து வருவதால் பிப்.10-ம் தேதி வரை தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று கடிதத்தில் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தேவை இருந்தால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.