சென்னை; சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சேட்டை செய்த பாஜக நிர்வாகி பால கணபதிக்கு பாஜக புது அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில், அவர்மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 11 ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பாஜக நிர்வாகி பால கணபதி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் ரீதியாக சேட்டை செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில், பால கணபதி இடம் பெற்றுள்ளார்.
இந்த குழுவுக்கு காந்தி எம்எல்ஏதான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உறுப்பினர்களாக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் உள்ளனர். அவருடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால கணபதியும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
பாலியல் சீண்டலால் பால கணபதி கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு புதியதொரு அங்கீகாரத்தை பாஜக கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சசிகலா புஷ்பாவிடம் தவறாக நடந்துகொண்ட பாலகணபதி மீது, சசிகலா கணவர் ராமசாமி, தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.