சென்னை:
சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தன் கணவரின் ட்ராக் ரெகார்டுகள் தோண்டி எடுக்கப் படுவதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், அவரது கணவர் லிங்கேஸ்வர் திலகம் மற்றும் அவரது மகன் பிரதீப்ராஜா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘எங்கள் மீது அண்ணாநகர் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால், எந்த நேரத்திலும் எங்களை காவல்துறையினர் கைது செய்யலாம் என அஞ்சுகிறோம். எங்கள் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் ஆபாசமாக திட்டியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒருவர் அண்ணா நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில்தான் இருவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.