சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி, நேற்று இரவு திடீரென சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அருண்ஜேட்லி, அமித்ஷா, ராகுல் உட்பட அகில இந்திய தலைவர்களும் தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு சசிகலாவை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல் பரவி உள்ளது.
இருவரும் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அப்பல்லோ வந்து சென்றார். பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார்.
ஆனால் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் ராஜாத்தி சென்று வந்ததன் காரணம் தெரியவில்லை.