சென்னை
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை பெற்று சென்னை வந்த சசிகலா வரும் 17 ஆம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் தோழி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக நான்கு ஆண்டுக் காலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆன சசிகலா கொரோனா பாதிப்பு காரணமாகப் பெங்களூருவில் தனிமையில் இருந்தார். அதன் பிறகு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி காலை 7.45 மணிக்குச் சென்னைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் கிளம்பி வந்தார்.
வழி நெடுக சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அடுத்த நாள் காலைதான் சென்னை வந்தடைந்தார். அவர் தனது உறவினர் இளவரசி வீட்டில் தற்போது தங்கி உள்ளார். அவரை நாளை தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் சந்திக்க உள்ளார். அவரது ஒவ்வொரு அசைவும் தற்போது அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்படுகிறது. மீண்டும் அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.
வரும் 17 ஆம் தேதி அன்று சசிகலா தஞ்சாவூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது முக்கிய உறவினர்களை சந்திக்கவும் ஓய்வு எடுக்கவும் அவர் தஞ்சை செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் அவர் அங்குள்ள கட்சி நிர்வாகிகள் சிலருடன் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அது மட்டுமின்றி வரும் 25 ஆம் தேதி அமமுகவின் 5 நிர்வாகிகள் டில்லி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.