பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றதாக ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் கூறினார்.

தன்னை சசிகலா ஆசிர்வாதம் செய்ததாகவும், அவர் தற்போது மவுன விரதத்தில் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களத்தில் இறங்கிய டிடிவி தினகரன், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு அமோகமாக வெற்றிபெற்றார்.

இந்நிலையில், தான் பெற்ற வெற்றிக்கு, சசிகலாவிடம் ஆசி பெற இன்று பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார்.

அங்கு சசிகலாவை சந்தித்ததாகவும், அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தனக்கு தலையை அசைத்து  ஆசி வழங்கியதாகவும் கூறினார்.

மேலும், `ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா மவுன விரதம் இருந்து வருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதத்தில்தான் இருப்பார் என்று தெரிகிறது என்று கூறினார்.

மேலும், எனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவரிடம் எடுத்து கூறினேன். அவர் அனைத்தையும் கேட்டுக் கொண்டு ஆமோதித்துத் தலையசைத்தார்’ என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் டிடிவி ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி,

`அவர்களுக்கு பதவியில் இருந்து பிரதிநிதிகளை நீக்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ்ஐ  அ.தி.மு.க-வின் தொண்டர்கள் புறக்கணித்து வெகு நாள்கள் ஆகின்றது. கட்சியிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. அது புரியாமல் பதவியும் ஆட்சியும் கையில் இருப்பதால், நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்’ என்று நக்கலாக கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது,  `ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்தத் தவறும் நடக்க வில்லை. ஆனால், அது குறித்து தவறான பிரசாரத்தை ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். சசிகலாவிடம் வீடியோ நகலை வாங்கி வெற்றிவேலிடம் கொடுத்தேன். ஆனால், வெற்றிவேல் எங்களையும் மீறி வீடியோவை வெளியிட்டுவிட்டார் என்று கூறினார்.

சமீபகாலமாக சசிகலா உறவினர்களுக்கும் டிடிவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது உரசல்கள் நடைபெற்று வருகிறது. இது ஜெ. சிகிச்சை வீடியோ வெளியானபோது வெளிப்படையாக தெரிந்தது. அதன் காரணமாக டிடிவியிடம் சசிகலா பேச மறுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டாம்  என்றும் கொஞ்சநாள் பொறுத்திரு என்று டிடிவியிடம் சசிகலா கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால், ஆர்.கே.நகரில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றதுடன், சசிகலாவிடம் ஆசி வாங்க சிறைச்சாலைக்கும் சென்றார்.

ஆனால், சிறையில் டிடிவியிடம் சசிகலா பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைத்தான் சசிகலா மவுன விரதம் இருந்து வருவதாக டிடிவி பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.