நினைவுகள்: ( ஜெ. பேட்டியின் நான்காம் – இறுதி பாகம்)
சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா?
ஜெ: இதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)
சிமி: ஏன் ?
ஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.
அந்த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதாவாக நான் இப்போது இல்லை.
என்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
சிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் ? ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள். அப்படித்தானே?
ஜெ: நான் ஆண்களை வெறுப்பவள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.
சிமி: சசிகலாவுடனான உங்கள் நட்பு இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன்? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன்?
ஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட பெண்மணி அவர். எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்திருக்கிறார்.
உங்களுக்கு தெரியுமா? அவர் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.
பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.
எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் சசிகலா செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.
சிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி ?
ஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை.
சிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா ? இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா ?
ஜெ: இல்லை. அப்படிப்பட்ட யாரையும் நான் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.
என்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன். ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது ?
ஜெ: இல்லை. எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.
தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.
இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் மிகவும் விரும்பவே செய்கிறேன்.
சிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி ஜெயாஜி.
ஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.
(பேட்டி நிறைவு.)
ஜெயலலிதா பேட்டி முதல் பாகம்
ஜெயலலிதா பேட்டி இரண்டாம் பாகம்
ஜெயலலிதா பேட்டி மூன்றாம் பாகம்
வீடியோ லிங்க்: 1:
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
வீடியோ லிங்க்: 2 :
https://www.youtube.com/watch?v=Cf2bU9xD-3E