சென்னை:

.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இன்னும் சிறிது நேரத்தில் சாலை மார்க்கமாக பெங்களூரு கிளம்புகிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகயோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் வெளியிட்டது. மறைந்த ஜெயலலிதாவை விடுத்து மீதமுள்ள மூன்று குற்றவாளிகளுக்கும் தண்டனை அளித்த நீதிமன்றம் இவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்றே விமானம் மூலம் சசிகலா பெங்களூரு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவரது ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் இருந்தார்.

பிறகு போயஸ் கார்டன்  இல்லத்துக்கு வந்த அவர் இன்று அதிகாலை விமானத்தில் பெங்களூரு செல்வார் என்று தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அவர் போயஸ் இல்லத்தில் தான் இருக்கிறார்.

இன்னும் சிறிது நேரத்தில் அவரை சந்திக்க அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் வர இருக்கிறார்கள். அவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு செல்கிறார் என்று போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை சரியில்லாததால், நீதிமன்றத்தில் சரணடைய 4 வார கால அவகாசம் கேட்டு சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்றாலும் இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

சசிகலா உள்ளிட்ட மூன்று குற்றாளிகளும் சரணடையும் பெங்களூரு  நீதிமன்றத்தை சுற்றி பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்ததும், அவர்கள் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பெங்களூரு மத்திய சிறையில் சிறை அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.