ஸ்டாலினை குற்றம் சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை!

Must read

சென்னை,

திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலா இன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்‌ உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக  சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சசிகலா வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்து விட்டு; அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக் கூறிய நுணுக்கமான வாதங்களை புறம்தள்ளிவிட்டு; ஜெயலலிதாவின்  அரும் செயல்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் உள்ளது. ஜெயலலிதாவின், ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக்கும் முயற்சி கடந்த தலைமுறை களின் தந்திரமாக இருந்திருக்கலாம். அனைத்துத் தகவல்களும் ஒரு நொடியில் எல்லோரது விரல் நுணிக்கும் வந்துவிடும் இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப் பிரச்சாரங்கள் நெடு நேரம் உலவ முடியாது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

ஜெயலலிதா ஆணையின்படி, உச்ச நீதிமன்றத்தின் தடை ஆணையை மறு பரிசீலனை செய்யக் கேட்டு 19.5.2014 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

திமுக பலம் வாய்ந்த உறுப்பினராக பங்கு பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 11.7.2011 அன்று காட்சி விலங்குகள் பட்டியலில் புலிகள், கரடிகள் போன்றவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்து ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.

இந்த அறிவிக்கை காரணமாகத் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் முழுமை யாக தடை செய்தது. எளிய எடுத்துக்காட்டு மூலம் சொல்வதென்றால், நெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்த ஓர் இரு வழிச் சாலையை திடீரென்று ஒருவழிச்சாலை என்று கூறி விட்டால், அந்த சாலையில் மறுக்கப்பட்ட திசையில் பயணிப்பது `குற்றம்’ என்றாகி விடுவதைப் போல,

ஜல்லிக்கட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஓர் அறிவிக்கையால் தடை செய்யப்பட்டு விட்டது. ஜல்லிக்கட்டுக்கு `தடை’ என்பது மத்திய அரசின் ஒரு திடீர் அறிவிப்பால் இப்படித் தான் வந்தது.

இதுகுறித்து  பிரதமரிடம் 7.8.2015 அன்று ஜெயலலிதா  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது, அதில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு `காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகள் நீக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டு 22.12.2015 அன்று கடிதம் ஒன்றினையும் பிரதமருக்கு ஜெயலலிதா  எழுதி இருந்தார்கள்.

ஆனால், மத்திய அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் 7.1.2016 அன்று ஒரு காப்புரையை மட்டும் வெளியிட்டதே தவிர, ஜல்லிக்கட்டுக்குத் தடை வரக் காரணமாக இருந்த அம்சத்தைத் தொடவே இல்லை.

1960-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் விலங்குகள் வதை தடைச் சட்டத்தை உரிய முறையில் திருத்தியும், இது தொடர்பான ஏனைய மத்திய அரசு அறிவிக்கைகளில் மாற்றங்களைச் செய்தும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும் வகையில் நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள் என்று ஜெயலலிதா பாரதப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் இத்தகைய ஒரு சட்டத் திருத்தம் வருவதற்கு நேரமில்லை என்று கூறி புறக்கணித்துவிடாமல், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நீட்டித்து, இதற்கான நேரம் ஒதுக்கி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குங்கள் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதோடு, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையையும் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் 7.1.2016 அன்று மத்திய அரசு அளித்த காப்பு ரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் 12.1.2016 அன்று உச்ச நீதிமன்றம் தடையை உறுதி செய்தது. காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகள் நீடிக்கும் வரை தடையை நீக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருந்தது.

ஒரு நிகழ்ச்சியில், குறிப்பிட்ட ஒரு வகையில், பயன்படும் வண்ணம் எந்த ஒரு காளை மாட்டையும் பயிற்றுவிப்பதே 1960-ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல;

எனவே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் பயிற்றுவிக்கப்படுவதையே ஏற்க இயலாது என்ற நிலைப்பாட்டில் இருந்து தான் ஜல்லிக்கட்டை இப்போது உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

“ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக 2009-ம் ஆண்டு தமிழ் நாடு அரசு இயற்றிய சட்டம், 1960-ம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் விலங்குகள் வதை தடைச் சட்டத்திற்கு முரணானது; ஏற்க இயலாதது” என்று ஜல்லிக்கட்டுக்கு தடை கோரியவர்கள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார்.

ஜெயலலிதா அரசால் ஜல்லிக்கட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நெப்ஷடே மாநில அரசு 2009-ம் ஆண்டு இயற்றிய சட்டத்தை கேள்வி கேட்க 1960-ம் ஆண்டின் மத்திய அரசு சட்டத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், காளை மாட்டை பயிற்றுவிப்பது மிருக வதை அல்ல என்றும், பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ ஒரு சம்பவம் நடந்தது என்று கூறி இன்று ஜல்லிக்கட்டு தடை செய்வதை ஏற்க முடியாதது என்றும் வாதிட்டார்.

இதற்கு ஒரு உதாரணத்தையும் குறிப்பிட்டார்: “யாரோ ஒருவர் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டார் என்பதற்காக, இனி வங்கிகள் யாருக்கும் கடன் தரவே முடியாது” என்று உத்தரவிட முடியுமா? அதைப் போலத் தான் இதுவும் என்று ஆணித்தரமான வாதங்களை ஜெயலலிதா அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தார்.

ஆனாலும் மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960, காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டு இருப்பது ஆகிய இரு மூலக் காரணங்களை உச்ச நீதிமன்றம் உறுதியாகப் பிடித்துக்கொண்டு கடந்த நவம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டது.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு ஜெயலலிதா அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மூடி மறைத்துவிட்டு, திமுக மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது என்ற உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல.

நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி “ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததற்கான காரணங்கள்” என்று யார் ஒருவர் கூகுளில் தேடினாலும் பல்லாயிரக்கணக்கில் பக்கம் பக்கமாக உண்மை தகவல்கள் கிடைக்கும் காலம் இது.

எனவே, தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று திரு. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Sasikala issues statement on jallikattu . countering MK Stalin’s statement. Sasi Vs Stalin

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article