Sasikala, Dhinakaran, EPS, OPS & Delhi Police: The Tamil Nadu drama isn’t over yet

பாரதிய ஜனதாவின் திட்டப்படி அரங்கேற்றப்பட்டு வரும் ‘தமிழ்நாடு கிளீன்அப் பிராஜக்ட்’ டின் அடுத்தடுத்த காட்சிகள்தான் தமிழகத்தில் தற்போது பரபரப்பாக அரங்கேறி வருபவை என்கிறார்கள், விவரமறிந்த டெல்லி வட்டார தலைவர்கள். இந்த நாடகத்தில் அரங்கேற வேண்டிய உச்சக்கட்டக் காட்சிகள் இன்னும் மிச்சமிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை வேகமாக விரிவு படுத்திவரும் பாஜக பரிவாரத்தினர், தென்மாநிலங்களுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் மட்டும் காலூன்ற முடியாமல் தவித்து வருகின்றனர். காங்கிரஸ் வசமிருந்த தமிழக அரசியல், ஒரு கட்டத்தில் திராவிட இயக்கத்திற்கு கைமாறிய பின்னர், அரைநூற்றாண்டுக்கும் மேலாக அதுவே நிலைத்தும் விட்டது. அதை அசைத்துப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பாக ஜெயலலிதாவின் மரணமும், திமுக தலைவர் கருணாநிதியின் மௌனமும் அவர்களுக்கு வாய்த்து விட்டது.

ஜெயலிலதா மரணத்திற்குப் பிறகு, அவருடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் என்ற வகையில் கட்சியை கையகப்படுத்தும் வேலையில் இறங்கிய சசிகலாவுக்கு எதிரான காய்களை வேகமாக நகர்த்தியது, காவியதிகாரத்தின் கரம். கணக்குப்படி தற்போது வரை அனைத்துக் காய்களும் கச்சிதமாகவே நகர்த்தப்பட்டுள்ளன. ஊழல், அதிகார துஷ்ப்பிரயோகம், அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு, அதிகாரக் குவிப்பு என சசிகலா குடும்ப முகாமிற்குள் குவிந்து கிடந்த அனைத்து எதிர்மறை அம்சங்களும், பாரதிய ஜனதாவின் வேலைத்திட்டத்தை மிக எளிதாக்கி விட்டன.

புன்னகை மன்னன் என்ற பெயரோடு வலம் வந்து கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் தனது காயாக மாற்றிக்கொண்ட பாஜக, அடுத்தடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், சிறைக்கு சென்ற சசிகலா சில செக்குகளை வைத்து விட்டுப் போகவே, தமிழ் நாடு க்ளீன் அப் ப்ராஜக்டில் எதிர்பாராத தொய்வு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியடைந்த அரசு, தன் பாட்டுக்கு குத்துமதிப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுகவின் ஈர்ப்புவிசையாக மாறிய டிடிவி தினகரன், பாஜகவின் திட்டத்திற்கு அடுத்த தடையாக இருந்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் வந்தது. இரு அணிகளின் போட்டா போட்டியில் இயல்பாகவே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விட்டது. அடுத்து வாக்குப் பணம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் அணி சிக்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதும், அதில் ஆவணங்கள் சிக்கியதும், விசாரணை தொடர்வதுமாக பரபர காட்சிகள் தொடர்ந்தன.

இதுமட்டுமின்றி, பெங்களூருவில் சாலைத் திட்டங்களில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு உயரதிகாரிகளுக்கும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரிகளில், தற்போதைய அமைச்சர்களுடன் பணப்பரிமாற்றம் செய்ததற்கான தகவல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 60 நாட்களில் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி உள்ளது. இதில் 150 கோடி ரூபாய்க்குமேல் சிக்கி உள்ளதாக வருமாவரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டுமின்றி, பெங்களூரு, கொல்கத்தா, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலும்மு, தலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளிலும் இந்தச் சோதனை நடந்துள்ளது. சில அமைச்சர்கள் தங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்களது வேலையே, கமிஷனை கரெக்ட்டாக பேசி வாங்குவதுதான். இப்படியாக, அமைச்சர் பெருமக்கள் பலரும் ஏகத்துக்கும் பல்வேறு விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஆர்கே நகர் தேர்தலை எந்தச் சிரமமும் இல்லாமல் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

அடுத்து…

டிடிவி தினகரன் பக்கம் முழுமையான கவனம் திரும்பியது. தினகரன் மீதான பழைய பெரா – அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கு வேகமாக நகரத் தொடங்கியது. இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருமாறு டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர் கூறவே, அதன் அடிப்படையில், டிடிவி தினகரன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சம்மனை புதன் கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கே வந்து டெல்லி போலீசார் வழங்கிச் சென்றனர்.

இதனிடையே, சசிகலா குடும்பத்திற்குள்ளேயே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் படத்தை கட்சி அடையாளங்களில் பயன்படுத்துவதை தவிர்த்தது உள்ளிட்ட காரணங்களால், தினகரன் மீது சசிகலாவே அதிருப்தியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே, சசிகலா – தினகரன் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, தினகரனுக்கு எதிராக சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் திசை திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது, மகாதேவனின் மரண வீட்டிலேயே இதற்கான சமிக்ஞைகள் வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அறியமுடிகிறது.

இந்தக் குடும்ப பூசலின் உச்சக்கட்டமாக, திவாகரன் தரப்பில், அவர்களது உறவினர்களில் ஒருவரான வெங்கடேஷ் என்பவர்  ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.பி.ராஜாவைச் சந்தித்து டீல் பேசியுள்ளார். அதன்படி, சசிகலா கட்சியின் இடைக்கால பொதுச்செயலளராக நீடிப்பது என்றும், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமே இருப்பது என்றும் ஒரு யோசனையை ஓ.ராஜாவிடம், வெங்கடேஷ் என்பவர் முன்வைத்துள்ளார். ஆனால், சசிகலா குடும்ப எதிர்ப்பை ‘தர்மயுத்தம்’ என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து களமாடிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, திவாகரன் தரப்பில் முன்வைக்கும் யோசனையை ஏற்பது சாத்தியமானதாக இல்லை.

ஆக, சசிகலா குடும்பத்தினர் இல்லாத அதிமுக என்ற முழக்கத்துடன் தற்போது கிளம்பி இருக்கும் அமைச்சர்களின் அடுத்த கட்ட நகர்வு தங்களது தலைமையைத் தேர்ந்தெடுப்பதாகத்தான் இருக்கும், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் என தற்போதைய அமைச்சரவை புள்ளிகள் மீது வருமானவரித்துறையின் கரும்புள்ளிகள் விழுந்து விட்ட நிலையில், மத்திய அரசின் சமிக்ஞைக்கு ஏற்பவே, அந்த அடுத்த கட்ட நகர்வும் இருக்கும்.

ஆக, அதிமுகவை துவம்சம் செய்யும் பாஜகவின் ‘தமிழ்நாடு க்ளீன் அப் ப்ராஜக்ட்’ திட்டத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் அரங்கேறுவதற்கு முன்பாக, இன்னும் பல பரபர காட்சிகள் அரங்கேற வேண்டியது பாக்கி இருக்கிறது.

இடைவேளை இன்றித் தொடரும் இந்த நாடகம் இன்னும் முடியவில்லை என்பது தெரிகிறது. எப்போது முடியும் என்றுதான் தெரியவில்லை.