சென்னை: அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா ஆடியோ வெளியிடப்படுகிறது என முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று தனது பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது, “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் சுனிதா, திடீரென மாயமான நிலையில், அவர் சடலமாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ‘இதனால, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில், மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது செல்கிறது என்பதே தெரியவில்லை. கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைத்துவிடுவோம் என்று கூறியிருந்தார்கள் தற்போது அவர்களால் குறைக்க முடியுமா? தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை என்ற பலகையை ஆங்காங்கே காண முடிகிறது. இல்லை இல்லை என சொல்ல ஒரு அரசாங்கமா? எங்களுடைய ஆட்சி காலத்தில் கரோனா உட்சபட்சமாக 7 ஆயிரம் தான் இருந்தது. தற்போது ஏறுமுகத்திற்குச் சென்றுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு கரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும்” .
மேலும், “அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசகிலா எப்படி அதிமுகவுடன் உறவு கொண்டாட முடியும் என்று கேள்வி எழுப்பியவர், இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவிற்கு வெற்றிகரமான தோல்வி தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா ஆடியோ வெளியிடுகிறார். ஆடியோ வெளியிட்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்/
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால், ஒரு கட்சி சார்ந்து பேசும்போது நாம் எது வேண்டுமானலும் பேசிவிட முடியாது. வரம்பு மீறி பேசக்கூடாது, அதனை கட்சி ஏற்றுக் கொள்ளாது, அதனால் தான் புகழேந்தியை நீக்கினோம். மேலும் சசிகலா, அவர்களை சார்ந்தவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என தீர்மானம் உள்ளது. துரோகம் செய்ய நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக உண்மை வெளிவர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமும். எதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.