சென்னை: சசிகலா இன்று சென்னை வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா சமாதி, போயஸ்தோட்டம் இல்லம் போன்ற பகுதிகளிலும் கூடுதல் காமிரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான சசிகலா இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையை அமமுகவினர் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். வரும் வழியில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சசிகலா வரும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவினரும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் எனவே, அவர் கொடி பயன்படுத்த உரிமை உண்டு என அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகம் வரும் சசிகலா தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு செல்கிறார். அவருக்கு சென்னையிலும் பல இடங்களிலும் வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், சசிகலா தியாகராய நகருக்கு செல்லும் வழியில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் போனற் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சசிகலா திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கோ , போயஸ் தோட்ட இல்லத்துக்கோ அல்லது அதிமுக தலைமை அலுவலகத்துக்கோ, செல்ல முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் வகையில்,சாபலையின் இரு பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பேரிகாடுகள் வைத்தும், மேலும் ஏராளமான புதிய காமிராக்கள் பொருத்தப்பட்டு, அந்த பகுதி முழுவதும முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.