தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

“ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தனர். சரியான தகவல்களை அளிக்கவே இல்லை.
அவரது சிகிச்சை குறித்து அரசு சார்பிலும் மக்களுக்கு அறிக்கை தரவில்லை. 75 நாட்களில் ஜெயலலிதா மரணச் செய்தி வெளியான போதும் குழப்பமே நிலவியது!”
“கூவத்தூரில் நடந்த கூத்துக்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும்.

அங்கே அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருந்தார்கள். தன்னை அடைத்து வைத்திருந்தாக அறை சாவியை அவையில் செம்மலை காண்பித்தார். ஆனாவ் அதை அவைத் தலைவர் கண்டுக்கொள்ளவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையான கடிதம் அனுப்பவில்லை. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை.
சட்டசபையில் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடியாது. காவல்துறையினர்கள் மாறுவேடத்தில் வந்து எங்களை தூக்கி வீசினர். இது குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கமளிக்க நேரம் கேட்டுள்ளோம்.

சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது திமுக பிரச்னை இல்லை மக்கள் பிரச்னை. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முன் வரவேண்டும். வருகின்ற 22-ம் தேதி திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
திமுக மட்டும் சட்டப்பேரவையில் அராஜகம் செய்வது போன்று வீடியோக்கள் வெளியாகி வருகிறது. வீடியோ எடுப்பது எல்லாம் அவர்கள் அதிகாரத்தில் உள்ளதால், இது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். திமுக வாக்குவாதம் செய்வதை மட்டும் வெளியிடுகிறார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.