டெல்லி: ஜனவரி 27ந்தேதி சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் சசிகலா 100 சதவிகிதம் சேர வாய்ப்பே இல்லை என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநில முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
2நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பிரதமரை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு தேவையானவைகள் குறித்து மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு,
கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றதே…-
பதில்: அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அவர்களுக்கு வேண்டிய கருத்தைத்தான் சொல்வார்கள். எங்களுடைய கருத்துக்கணிப்பு, அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அம்மாவின் அரசு மூன்றாவது முறை தொடர்ந்து ஆட்சி அமைக்கும்.
கேள்வி: தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பிஜேபி சொல்கிறது? தாமரை மலர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அந்தக் கட்சி வளர வேண்டுமென்று தான் நினைப்பார்கள், அடுத்த கட்சி வளர வேண்டுமென்று யாரும் நினைக்க மாட்டார்கள். தேர்தல் வரும் வரை எல்லா கட்சியினுடைய தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஊக்கப்படுத்துவது ஒவ்வொரு கட்சியின் தலைவருடைய நோக்கம். அதில் மற்றவர்கள் யாரும் நுழைய முடியாது.
நான் கட்சி வைத்திருந்தால், என் கட்சி வர வேண்டுமென்றுதான் நினைப்பேன். அகில இந்தியக் கட்சி அப்படித்தான் பேசுவார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின்படி தான் அவர்கள் பேசுவார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எல்லா கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அதற்குத்தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: அதிமுக கூட்டணியில், பா.ஜ.கவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும், அவர்கள் எத்தனை தொகுதி கேட்கின்றார்கள்?
பதில்: தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகுதான் இவையெல்லாம் முடிவு செய்யப்படும்.
கேள்வி: சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளாரே, அவர் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
பதில்: அதற்கான வாய்ப்பே கிடையாது. அவர் அண்ணா தி.மு.க. கட்சியிலேயே கிடையாது.
கேள்வி: சசிகலா அண்ணா தி.மு.க.விற்கு சேர வந்தால், அவரை ஏற்று கொள்வீர்களா?
பதில்: 100 சதவீதம் கிடையாது. அண்ணா தி.மு.க.வில் தெளிவாக முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. கட்சிக்கு பல பேர் அங்கிருந்து வந்துவிட்டார்கள், அவர் ஒருவர் தான் இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் பார்க்கின்றபோது பெரும்பாலனவர்கள் அங்கிருந்து அண்ணா தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்கள். சிலர் அவருடன் இருக்கிறார்கள்.
கேள்வி: அவர் மட்டும் இருக்கிறார் என்கிறீர்கள், அவர் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: அவரையே அம்மா பல்லாண்டு காலம் நீக்கி வைத்தார். அம்மா இறந்த பிறகுதானே அவருக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். அம்மா இருக்கும்போது, அவர் கட்சியிலேயே கிடையாது.
கேள்வி: சசிகலாவை, அவரை மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைக்க வேண்டுமென்று குருமூர்த்தி உள்பட பாஜகவினர் கூறி வருகிறார்களே?
பதில்: அப்படி யார் சொன்னது? அதைச் சொல்லுங்கள். பாஜக தலைவர்களை நாங்கள் சந்தித்தது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றுதான் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 100 சதவீதம் இதுதான் பேசினோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.