டுத்த முதல்வர் சசிகலாவா, அல்லது ஓ.பி.எஸ். தொடர்வாரா.. என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியலே பரபரப்பாக இருக்கிறது. இரண்டு அணிகளும் எம்.எல்.ஏக்களை திரட்டுவது, பொத்திப்பைத்திக் காப்பது என்று தீவிரமாய் உழன்றுகொண்டிருக்கின்றன. ஏனென்றால், இந்த சூழலில் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் முக்கியம்.

அதற்கேற்ற மாதிரி, சில எம்.எல்.ஏக்கள் “அங்கிருந்து இங்கு வந்தததாகவும், இங்கிருந்து அங்கு போனதாகவும் பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன.  இதற்கிடையே ஒரு எம்.எல்.ஏவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் எந்த வித பதட்டமும் இல்லாமல், தன் தொகுதி மக்கள் அனுப்பிய கோரிக்கை மனுக்களை படித்துக்கொண்டிருக்கிறார் ஒரு “இரட்டை இலை” எம்.எல்.ஏ!

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நின்று வென்றவர்கள் மூவர். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.

இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால்  அ.தி.மு,க சட்டமன்ற உறுப்பினர்களாகவே கணக்கில்கொள்ளப்படுவார்கள்.

இவர்களில்  கருணாஸ், தனியரசு  இருவரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.

இன்று மாலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், சசிகலாவையும் தனித்தனியே கவர்னர் சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் இருவரும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கவர்னரை சந்திப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்பது தெரியாத சூழல்.

ஆக.. அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் நாம், தமிமுன் அன்சாரியை தொடர்புகொண்டோம்.

அவர், சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இருப்பதாகவும், தனது தொகுதியில் இருந்து வந்திருந்த மனுக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்த பரபரப்பான சூழலில் தொகுதி மக்களின் மனுக்களை பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே..” என்று வியப்புடன் கேட்டால், “நான் தன்மானம் மிக்கவன். எவரையும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு கிடையாது.  என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் இருக்கின்றேன். என் தொகுதியில் இருந்து வந்துள்ள மனுக்களை இப்போது ஆய்வு செய்து வருகின்றேன்.  எவரையும்  நான் இப்போது ஆதரிக்கப்போவதில்லை” என்று அமைதியாகச் சொல்கிறார்.  இதே கருத்தை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

தொகுதி மக்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்!