சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி வந்த நிலையில், இன்று திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். இது அவரது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடே வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திரும் வேளையில், மத்தியில் ஆட்சியை தொடர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டிலும், பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணிகளை அமைப்பதில் திமுக, அதிமுக, பாஜக தீவிரமாக செயலாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில், ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி, பாராளுமன்றத்திலும் தொடர்கிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், இரண்டும் தனித்தனியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம் என்று அறிவித்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தலைவர்கள், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை சந்தித்து பேசிய நிலையில், கூட்டணி உருவானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, எங்கே போட்டியிடுவது என்பது குறித்து தனது கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (மார்ச் 12ந்தேதி) ஆலோசனை நடத்துவதாகவும், நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் எசமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவில் இணைப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்தித்த சரத்குமார், தனது கட்சியை பாஜகவில் இணைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். சரத்குமாரின் செயல் கட்சி தொண்டர்களிடையேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.