சென்னை: நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால், புதிய அணி உருவாகும் என சமக கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் ஏற்கனவே, அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு மிரட்டி வரும் நிலையில், தற்போது சிறிய கட்சியான சமத்துவ மக்கள் கட்சியும் தனது பங்குக்கு அதிமுகவை மிரட்டியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியளார்களை சந்தித்த சரத்குமார்,  சமக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது என்றவர், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்,கூடுதல் சீட் கேட்டு தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம், எங்கள் கட்சிக்கு  ஒரு சீட்டு, 2 சீட்டு 3 சீட்டு என்று அதிமுக எங்களுக்கு ஒதுக்கினால், அதை  நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.

இதற்கிடையில் செய்தியளார்களிடம் பேசிய ராதிகா சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.  ராதிகா சரத்குமார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு எதிராக சரத்குமாரும் போர்க்கொடி தூக்கி உள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.