தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ள கே.சி.ஆர். கடந்த வாரம் கம்மம் பகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ கட்சியை தேசிய அளவில், அனைத்து மாநிலங்களிலும் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகாவில் ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் மூலம் தனது கட்சியை கொண்டு சென்ற நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமத்துவமக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதாவை நேற்று திடீரென சந்தித்தார். சால்வை மற்றும் நினைவுப்பரிசு வழங்கினார்.

பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்தும் விதமாக சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து செல்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.