சென்னை; உதயநிதியின் சனாதன சர்ச்சை பேச்சு குறித்து விமர்சனம் செய்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது. ஆடு ஒருநாள் இருக்காது என்பது உங்களுக்கு நினைவு இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்றும்,  ‘டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார். இவரது கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் உருவெடுத்து வருகிறது. நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கண்டனம் தெரிவித்திருந்தார். தாழ்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க. இன்றைக்கு சனாதனம் குறித்து பேசுகிறார்கள். இதுதான் வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.

அ.தி.மு.க-வை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதன்பிறகும் சரி.. அ.தி.மு.க. மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அ.தி.மு.க சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று சொல்லிவிட்டேன். அதற்கு மேல் விளக்கி விளக்கி கேட்கிறீர்கள். சனாதான ஒழிப்பு என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் இதை பேசுபொருளாக்கியிருக்கிறார். தமிழ்நாடு இன்று குட்டிச்சுவராகியிருக்கிறது. எல்லா துறைகளிலும் படுபாதாளத்திற்கு போய்விட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 4 பேரை துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்து இருக்கிறார்கள். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 9 கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. இப்படி தினம்தோறும் கொலைகள் நடக்காத நாட்கள் கிடையாது.

செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட ஊழல்கள், விலை வாசி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்கு இன்றைக்கு இந்த நாடகத்தை தி.மு.க அரங்கேற்றியுள்ளது. இதை எல்லாம் வைத்து மக்களை திசை திருப்புகிறார்கள். எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினையை கையில் எடுத்து மக்களை திசை திருப்புவதுதான் வாடிக்கையாக தொடர்கதையாக திமுகவிடம் உள்ளது. அதிமுகவை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒழுங்காக நாங்கள் நடந்து கொண்டு இருக்கிறோம்” என்று கூறினார்.

அ.தி.மு.க என்பது அண்ணா தி.மு.க அல்ல அமித்ஷா தி.மு.க என்று உதயநிதி விமர்சித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொன்றாக பேசி பேசி தன்னை முன்னிலைப்படுத்த பார்க்கிறார் உதயநிதி. அவர் என்ன சாதனை செய்து விட்டார் என்று அமைச்சராக்கியிருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் இதுதான் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் தகுதி. இதை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

அது ஒருபோதும் நடக்காது. வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. தி.மு.க-வில் கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து மற்றவர்கள் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும், கட்சி தலைவராக முடியும், என்று தி.மு.க-வில் சொல்ல முடியுமா? தி.மு.க அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு பிறகு இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். அப்படிப்பட்ட அடிமைத்தனமான அந்த கட்சி உள்ளது. சுதந்திரம் கிடையாது. ஒரு குடும்ப ஆட்சியாக உள்ளது. கட்சி கிடையாது. கார்ப்பரேட் கம்பெனி. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த நிலையில், எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார் போல் என விமர்சித்துள்ளதுடன்,  ஆடு ஒருநாள் காணாமல் போகும் போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில்,  ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து கழக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும்.

இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்’ கடந்த 2ம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன். ‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பதுஞ் என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களைஞ் மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?

சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை,கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன. இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.

மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்ஞ் போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலாஞ் நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களாஞ் மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்ஞ் என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.