மதுரை :
மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் பறையர், அருந்ததியினர் என இரு பிரிவு தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பிரிவினரான பறையர் இன மக்கள், தீண்டாமைச் சுவர் ஒன்றை கட்டி எழுப்பியுள்ளனர். இதற்கு தாழ்த்தப்பட்ட இன்னொரு பிரிவினரான அருந்ததியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட அருந்த்தி இன மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, சுவரில் உள்ள இரண்டு அடுக்கு செங்கற்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பேரையூர் காவல் அதிகாரிகள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது யாரோ ஒரு நபர் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர், அதற்குள் அந்த மர்மநபர் தப்பியோடிவிட்டதாகவும், இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து சந்தையூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.